அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது அணுக்கழிவு குண்டு அல்லது ரசாயனத் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடம் எச்சரிக்கை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ரேடார்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க உளவுத் துறை அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்திடம் விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மீது அணுக்கழிவு குண்டு தாக்குதல் அல்லது ரசாயனத் தாக்குதலை நடத்த ஈரான் ராணுவம் சதித் திட்டம் தீட்டியுள்ளது" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
'அழுக்கு குண்டு' (Dirty Bomb) அபாயம்:
ஈரானில் வழக்கமான வெடிமருந்துடன் அணுக்கழிவுகளைச் சேர்த்து 'அழுக்கு குண்டு' (Dirty Bomb) எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவை அணுகுண்டு போன்ற பேரழிவை ஏற்படுத்தாவிட்டாலும், வெடித்துச் சிதறும் பகுதியில் கடுமையான கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தும். ஈரான் உளவாளிகள் அமெரிக்காவில் உள்ள சில சமூக விரோதிகளின் உதவியுடன் இத்தகைய குண்டுகளை அமெரிக்காவுக்குள் கடத்தி ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாகவும், திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உளவுத் துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில் பாதுகாப்பு உச்சகட்டத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பாதுகாப்பான ராணுவ தளங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளும் ராணுவ தளங்களின் குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

