ஓய்வூதியதாரர்கள் ரூ.70 சேவைக் கட்டணம் செலுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனத் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களது ஓய்வூதியத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து உயிர்வாழ் சான்றை (Life Certificate) சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
ஓய்வூதியர்களின் வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே டிஜிட்டல் முறையில் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறை (Biometric) மற்றும் முக அடையாளம் (Face Authentication) மூலமாக டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் (ஜீவன் பிரமாண்) சமர்ப்பிக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ரூ.70 சேவைக் கட்டணம் செலுத்தி, ஆதார் எண், கைப்பேசி எண், பிபிஓ (PPO) எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவித்துக் கைவிரல் ரேகையைப் பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பித்து விடலாம்.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழை எளிதாகவும் சிரமமின்றியும் சமர்ப்பிப்பதற்கு, இந்திய அஞ்சல் துறையின் இந்த இல்லம் தேடி வரும் டிஜிட்டல் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

