தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா 86வது அவதார பெருவிழா நடைபெற்றது. சக்தி கொடியை திருவிக சக்தி பீட வேள்விக்குழு பொறுப்பாளர் ஜெ.பத்மா ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆடை தானத்தை மன்ற தலைவர் விஜயலெட்சுமி வழங்கினார்.
மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனித நேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும் வேண்டி கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி.ஆர்.முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கஞ்சி கலயம், தீச்சட்டி எடுத்து ஆன்மிக ஊர்வலமாக வந்தனர். ஆன்மிக ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் கிருஷ்ணநீலா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வழியாக மன்றத்தை வந்தடைந்தது. அங்கு அன்னைக்கு கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், மன்ற துணைத்தலைவர் மாரியம்மாள், மன்ற பொறுப்பாளர்கள் மாரியம்மாள், தேவி, சுப்புலட்சுமி, சாந்தி, கற்பகம், சோலையம்மாள், பாப்பா,கார்மேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

