ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகள், ஃபீல்டிங்கில் 2 கேட்ச் உடன் அசத்தினார். இவரது உழைப்பினைப் பாராட்டி தமிழக முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் அவர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.