தசரா பண்டிகையை முன்னிட்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆண்டுதோறும் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வில், இந்த உருவப்பொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சி உருவப்பொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீ கேசவ் ராம்லீலா கமிட்டியினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரப்பான்பூச்சி என்பது அழுக்கையும் அசுத்தத்தையும் குறிப்பதாகும். தூய்மை இந்தியா மற்றும் தூய்மை டெல்லி ஆகிய பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், தீமையின் மீது நன்மையின் வெற்றியை நிலைநாட்டவும் இந்தச் சிக்னலாகக் கரப்பான்பூச்சி உருவப்பொம்மை எரிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகக் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (சி.ஜே.பி.) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக் குறியீடாகக் கரப்பான்பூச்சி மாறியுள்ள சூழலில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றது. இருப்பினும், இந்த நிகழ்வில் கரப்பான்பூச்சியைச் சேர்த்ததற்கு எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என கமிட்டியின் தலைவரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான அசோக் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.

போராட்டத்தால் ரூ.2,000 கோடி இழப்பு - வியாபாரிகள் வேதனை:

இதனிடையே, சி.ஜே.பி.யின் போராட்டங்கள் மற்றும் அதனால் விதிக்கப்படும் போக்குவரத்துத் தடைகளால் டெல்லியில் சிறு வணிகர்களின் வாழ்வாதாரமும் வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சந்தைக்கு மக்கள் வருவதைத் தடுக்கும் இப்போராட்டங்களைக் கண்டித்துப் பாலிகா பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், ‘சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்’ அமைப்பு சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், டெல்லி போராட்டங்களால் வியாபாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், தீபாவளி பண்டிகை முடியும் வரையிலாவது அனைத்துப் போராட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.