கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (17.10.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையொட்டி மாவட்டத்தில் 76 இடங்கள் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 22 இடங்கள் மிக அதிக பாதிப்பு வாய்ப்புள்ளவை, 12 இடங்கள் அதிக பாதிப்பு வாய்ப்புள்ளவை, 19 இடங்கள் மிதமானவை மற்றும் 23 இடங்கள் குறைந்த பாதிப்பு வாய்ப்புள்ளவை எனப் பிரிக்கப்பட்டுத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அவசர காலத்தில் பொதுமக்களைத் தங்க வைக்க 13,885 பேர் தங்கும் வகையில் 12 பல்பொருள் நிவாரண மையங்கள் மற்றும் 59 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. முதற்கட்ட மீட்புப் பணிகளுக்காக 4,850 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட மாவட்ட கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மணல் மூடைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறை சார்பில் அவசரகால சீரமைப்பு குழுக்கள் (150 பணியாளர்கள்) மற்றும் 24x7 இயங்கும் 1912 கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய உத்தரவுகள்:
மழைநீரால் சாலைகளில் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுத்து, பள்ளமான பகுதிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களைக் கண்டறிந்து பொதுப்பணித்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்று அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் மாணவ-மாணவியருக்குத் தங்கு தடையின்றி உணவு வழங்கப்பட வேண்டும்.
தாமிரபரணி உள்ளிட்ட ஆற்றுப்படுக்கைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதைத் தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு பரவலைத் தடுக்க உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்த மக்களை அறிவுறுத்த வேண்டும்.
"வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும் என்பதால் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து முழு வீச்சில் செயல்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம். அரசுத் துறை அலுவலர்கள் அனைவரும் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வேலுமணி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.வி.சாய் சரண் ரெட்டி, பத்மநாபபுரம் கோட்டாட்சியர் மாலதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

