எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி மீட்டுத் தரக் கோரித் தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, ஃபைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், தருவைகுளம் கடற்கரையிலிருந்து ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடந்த அக்டோபர் 1-ம் தேதியும், கூசைபாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு அக்டோபர் 2-ம் தேதியும், மைக்கேல் ஜான் சங்கர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு அக்டோபர் 3-ம் தேதியும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 13-ம் தேதி அதிகாலை மாலத்தீவுக்கு 180 கடல்மைல் தொலைவில் இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மாலத்தீவு கடற்படையினர் அந்த 3 செவுள்வலை விசைப்படகுகளையும், அதில் இருந்த 25 மீனவர்களையும் கைது செய்து மாலத்தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சட்டத்திற்கு உட்பட்டு மீன்பிடித் தொழில் செய்து வரும் தமிழக மீனவர்களையும், அவர்களின் 3 செவுள்வலை விசைப்படகுகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவித்து தாயகம் அழைத்து வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு, ஃபைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய சங்கம் சார்பில் தலைவர் ராஜ், செயலாளர் மனோகரன் வைஸ் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.