தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செட்டியாபத்து அருகேயுள்ள குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (தொழிலாளி). இவரது மனைவி சாந்தி (31). இவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து செல்வபுரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரெனச் சாந்தியை வழிமறித்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அக்கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சாந்தியைச் சரமாரியாக வெட்டிவிட்டு, மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பியோடியது.

இதில் பலத்த காயமடைந்த சாந்தி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியபடி சாலையில் அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் என்ன? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய 2 பேரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.