தூத்துக்குடி தாளமுத்து நகர் ராமதாஸ் நகரைச் சேர்ந்த மைதீன் என்பவரது மகன் தமிம் அன்சாரி (18). இவரது நண்பர், சிலுவைப்பட்டி சுனாமி காலனி கணபதி நகரைச் சேர்ந்த சந்தனராஜ் என்பவரது மகன் ரோனிக் ராஜ் (19). நேற்று இரவு சுமார் 10:45 மணியளவில், ரோனிக் ராஜ் தனக்குச் சொந்தமான யமஹா பைக்கில் தமிம் அன்சாரியைப் பின்னால் அமரவைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
வாகனம் மீளவிட்டான் - புதிய துறைமுகம் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில்வே கேட், இரயில் வருகைக்காக இரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், மூடப்பட்டிருந்த இரயில்வே கேட் மீது பலமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில், பின்னால் அமர்ந்திருந்த தமிம் அன்சாரிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுநர் ரோனிக் ராஜுக்குக் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுச் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தைக் கண்ட இரயில்வே கேட் கீப்பர் சௌந்தரபாண்டி உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். படுகாயமடைந்த ரோனிக் ராஜ் மீட்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி இரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகானந்த், உயிரிழந்த தமிம் அன்சாரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாகத் திருநெல்வேலி இரயில்வே காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

