மாரடைப்பு காரணமாக காலமான பிரபல இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானதை அடுத்து, அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் தேவா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து தேவாவின் உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வரைக் கண்டதும் கதறி அழுத தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவைக் கட்டியணைத்து முதல்வர் விஜய் ஆறுதல் கூறினார். மேலும், தேவாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
முதல்வர் விஜய் இரங்கல் செய்தி
தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் தேவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தேவாவின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் மாங்காடு அருகே இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

