தவெக ஆட்சியை மக்களும், தொழில் நிறுவனங்களும் பாராட்டி வருகின்றனர். சி.எம்.டி.ஏ அனுமதி, என்.ஓ.சி சான்றிதழ் என எதிலும் அரசியல் தலையீடு கிடையாது; மக்கள் சந்தோஷமாக உள்ளனர் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "ஜி.எஸ்.டி விவகாரத்தில் மூன்று சதவீதத்திற்குள் கடன் வாங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதுவரைக்கும் தான் நமது அரசாங்கம் கடன் வாங்கியுள்ளது; மேற்கொண்டு எதுவும் கிடையாது. கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.
எதிர்க்கட்சிகள் எப்போதும் பாசிட்டிவ்வான விஷயங்களைப் பார்ப்பதில்லை, மைனஸை மட்டுமே பார்த்து வருகிறார்கள். 2025 நவம்பர், டிசம்பர் மாதங்களில் கூட நிதிநிலை மைனஸில் தான் இருந்தது. இப்போது பிளஸ் (Plus) வந்தவுடன் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அகில இந்திய அளவில் நாம் பின்னால் இருக்கிறோம் என்று விமர்சிக்கத் தொடங்கி விடுகின்றனர். முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எங்கு என்ன மைனஸ் வரும் என்று காத்திருந்து அதைப் பற்றி மட்டுமே பேசுவார்.
தமிழ்நாட்டிற்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமரிடம் கேட்டுப் பெறுவோம் என்று தலைவர் தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் எந்த திட்டமாக இருந்தாலும் மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவோம்.
முதலமைச்சர் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சுற்றுப்பயணம் செய்யலாம்; அதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யக்கூடாது. தேர்தலுக்காகச் சுற்றுப்பயணம் செய்வதாக எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன, ஆனால் நமது தலைவர் அப்படிச் செய்வதில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று விரும்பும் முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தை, இடைத்தேர்தலுக்காக என்று தேவையில்லாமல் விமர்சிப்பது தவறானது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய இரு தரப்பிற்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. மற்றவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது; மற்றவர்கள் அனைவரும் தங்களது கனவு உலகத்திலேயே வாழட்டும்.
தமிழ்நாட்டில் எந்தவொரு ஊழலும் இல்லாமல் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக வரலாற்றிலேயே ஊழல் இல்லாத அரசு அமைந்திருப்பது இதுவே முதல் முறை. ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள இந்த ஆட்சியை மக்களும், தொழில் நிறுவனங்களும் பாராட்டி வருகின்றனர். சி.எம்.டி.ஏ அனுமதி, என்.ஓ.சி சான்றிதழ் என எதிலும் அரசியல் தலையீடு கிடையாது; மக்கள் சந்தோஷமாக உள்ளனர். 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, அவை ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

