தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை மறித்துச் சோதனை செய்தனர்.அச்சோதனையில், காரில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட திருநெல்வேலி சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் கருப்பசாமி (42) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸன் அலி மகன் அம்மர் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 243 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,75,800 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

