தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பஜாரில் குமரவேல் என்பவர் கடை நடத்தி வருகிறார். கடந்த 25.09.2026 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், குமரவேலின் மனைவி பத்மா கடையில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள், பத்மா அணிந்திருந்த சுமார் 4½ பவுன் தங்கச் சங்கிலி மற்றும் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில், உதவி ஆய்வாளர் முனியசாமி, தலைமைக் காவலர்கள் பென் ஜான்சன் மற்றும் பேச்சி ஆனந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியிலும், அதன் சுற்றியுள்ள வழிகளிலும் இருந்த சுமார் 56 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

தலைக்கவசம் அணிந்திருந்ததால் குற்றவாளிகளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சவலப்பேரி பூலுடையார் சாஸ்தா கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் தலைக்கவசத்தை அகற்றியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய உதவியாக இருந்த சாயர்புரம் ஏற்காடு தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜான் பென்னி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நகையைப் பறித்துச் சென்ற தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 குற்றவாளிகளையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.