குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் இரண்டு பைபர் படகுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 500-க்கும் மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்; இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் உள்ளன. இந்நிலையில், குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ரஞ்சித்குமார் மற்றும் ரூபிஸ்டன் ஆகியோர் நேற்று (நவம்பர் 21) கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டுத் திரும்பிய பின்னர், தங்களது பைபர் படகுகளை வழக்கம்போலக் கடற்கரையில் நிறுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

நள்ளிரவில் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரப் பாதுகாப்புப் படை காவலர்கள், இரண்டு பைபர் படகுகள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், படகு உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராடித் தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் இதுபோன்ற சம்பவம் இதுவரை நடைபெற்றதில்லை என்பதால், மர்ம நபர்கள் திட்டமிட்டுப் படகுகளுக்குத் தீ வைத்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, படகுகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குலசேகரப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.