திருநெல்வேலி பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்ட் மேல்நிலைப் பள்ளியின் 5,000 மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கடந்த ஒரு வாரமாகத் தயாரித்த 4.5 லட்சம் விதைப்பந்துகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீசும் 'விதைப்பந்து மழை' நிகழ்வு நேற்று (நவம்பர் 21) நடைபெற்றது.

ஒரு விதைப்பந்தில் 5 மர விதைகள் வீதம் தயாரிக்கப்பட்ட இப்பந்துகளை ஏற்றிச் சென்ற 4 வாகனங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவகுமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்; மேலும் 7,500 பனங்கொட்டைகளும் நடப்பட்டன

கடந்த ஒரு வாரமாகப் பாளையங்கோட்டை இக்னேஷியஸ் கான்வெண்ட் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில் நான்கரை லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொரு விதைப்பந்திலும் ஐந்து விதமான மர விதைகள் உள்ளடங்கிய வகையில் இவற்றை மாணவிகள் உருவாக்கியிருந்தனர்.

இவ்விதைப்பந்துகளை விதைக்கும் நிகழ்வு நேற்று காலை 9 மணிக்குப் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. பள்ளித் தாளாளர் அருட்சகோதரி நிர்மலா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அருட்சகோதரி வசந்தி மேரி பிரிண்டா முன்னிலை வகித்துப் பேசினார். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, விதைப்பந்துகள் ஏற்றப்பட்ட நான்கு வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். விதைப்பந்துப் பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளிடையே பசுமை விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், ஹரிஹர செல்வன் ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து விதைப்பந்துகளை வீசும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

தலைமையாசிரியை வசந்தி மேரி பிரிண்டா, சமூக ஆர்வலர் பூ. திருமாறன், மருத்துவர் ஏகலைவன் மற்றும் ஆசிரியைகள் ஆனி கிறிஸ்டி, பிலோ, செல்வம், சோனா, சாந்தி, பாபு, சித்ரா, ஜமீலா, லியோ, கார்த்திகா, ஷீபா, முருகன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நாகர்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில் ஆகிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும், தாமிரபரணி நதிப் படுகைகளிலும், பல்வேறு குளக்கரை மற்றும் காலி இடங்களிலும் விதைப்பந்துகள் முறையாக விதைக்கப்பட்டன.

கைகளில் விதைப்பந்துகளும், மனங்களில் பசுமைக் கனவுகளுமாக மாணவிகள் நிகழ்த்திய இந்த 'விதைப்பந்து மழை'யைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவகுமார் கூறுகையில், "ஒரு கோடி விதைப்பந்துகள் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் விதைப்பந்து மழை பொழியத் தொடங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். விதைப்பந்துகளுடன் கூடுதலாக 7,500 பனங்கொட்டைகளையும் இக்னேஷியஸ் பள்ளி மாணவிகள் நட்டுப் பசுமைப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.