சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, வி.எஸ். பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரண்டாம் இடம் பிடித்த தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், "தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்குப் பிறகே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், "சட்டமன்ற உறுப்பினரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கத் தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இத்தகைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்கக் கூடாது" எனக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு இன்று (செப்டம்பர் 03) தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், கொளத்தூர் தொகுதி த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு சட்டப்படி 'நிலைக்கத்தக்கது அல்ல' எனத் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டனர்.

