மதுராந்தகம் அருகே உள்ள புகழ்பெற்ற பெருக்கரணை 'நடு பழனி' முருகன் கோவிலில் பூட்டை உடைத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதக் கல் மூலவர் சிலையை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. இச்சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தில் உள்ள மலைக்குன்றின் மீது அமைந்துள்ள இக்கோவில் 'நடு பழனி' என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் சிலை அரிதான மரகதக் கல்லால் செய்யப்பட்டது. சுமார் 2 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை, பழனி முருகன் கோவில் மூலவர் சிலையைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் அறக்கட்டளை ஒன்று உள்ளூர் மக்களுடன் இணைந்து நிர்வகித்து வருகிறது. இக்கோவிலின் மலை அடிவாரத்தில் 45 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை வழக்கம்போல் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நடை திறப்பதற்காக மலைக்குன்றின் மீதுள்ள கோவிலுக்குச் சென்றனர். அப்போது, மூலவர் சன்னதியின் கதவுப் பூட்டு உடைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புடைய மரகதக் கல் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் உடனடியாகச் சிந்தாமூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்.

சம்பவ இடத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கோவில் காவலாளிகள் இரவில் மலை மீது தங்காமல் அடிவாரத்தில் உள்ள அறையில் தங்கியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், மலையின் பின்புறமாக ஏறி வந்து பூட்டை உடைத்துச் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், மாட்டுவதைத் தவிர்க்கக் கண்காணிப்புக் கேமரா (CCTV) மற்றும் அலாரத்திற்கான ஒயர்களையும் துண்டித்துவிட்டுச் சுலபமாகக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.