தூத்துக்குடி மாவட்டம் கீழச்செய்தலை கிழக்குத் தெருவைச் சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மகன் தமிழ்செல்வன் (27). கூலித் தொழிலாளியான இவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் மது அருந்திவிட்டு தனது தாய் மற்றும் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் தமிழ்செல்வன் மீண்டும் மது அருந்திவிட்டு தாய் மற்றும் மனைவியிடம் வீட்டில் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் இடையே இருவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தமிழ்செல்வன், வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுக்கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவைத் திறந்து, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தமிழ்செல்வனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அளித் தகவலின் பேரில், காவல்துறையினர் BNSS பிரிவு 194-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

