குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் (அக். 20) மற்றும் கொடியிறக்கம் (அக். 21) ஆகிய நாட்களை முன்னிட்டுப் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொாள்ளப்பட்டுள்ளன.
கோவில் வளாகத்தில் வேல், வாள் போன்ற உலோகப் பொருட்களைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்திப் பாடல்கள், படங்கள் மற்றும் சுவாமி படமிட்ட ஆடைகளைப் பயன்படுத்த எவ்விதத் தடையும் இல்லை எனக் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 11.10.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 20.10.2026 அன்று இரவு 12 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 21.10.2026 அன்று மாலை கொடியிறக்கம் மற்றும் காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், முக்கிய நாட்களான அக்டோபர் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு வழிமுறைகளும், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள்:
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்தவித ஆயுதங்கள் அல்லது பொருட்களைக் கொண்டு வரக் கூடாது.
வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் கடவுள் சம்பந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ, பயன்படுத்துவதற்கோ, பக்திப் பாடல்களை இசைப்பதற்கோ அல்லது ஆன்மீகம் சார்ந்த பனியன்கள் மற்றும் ஆடைகளை அணிந்து வருவதற்கோ எவ்விதத் தடையும் இல்லை.
தீவிர கண்காணிப்பு - பாதுகாப்பு ஏற்பாடுகள்:
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நிகழாமல் தடுக்கவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் மற்றும் பக்தர்கள் நடந்து வரும் வழிகள், கோவில் வளாகம், கடற்கரை பகுதி மற்றும் வெளியேறும் வழிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் (CCTV), உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுழற்சி முறையில் சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையில் ஆண், பெண் காவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, தசரா திருவிழாவைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்தி முடிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

