உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தசரா குழுவினருடன் குலசேகரன்பட்டினத்தில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் இன்று (செப்.19) சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் திருக்கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருச்செந்தூர் கோட்டாட்சியர், திருச்செந்தூர் சரகத் துணைக்காவல் கண்காணிப்பாளர், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தசரா குழுத் தலைவர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தசரா திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது, போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், வேஷம் அணியும் பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.