கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட தேரிமேல்விளை பகுதியில் அமைக்கப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ந.தளவாய் சுந்தரம் முன்னிலையில் இன்று (19.09.2026) திறந்து வைத்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்குட்பட்ட ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட 28AP026PN என்ற எண் கொண்ட தாய் நியாயவிலைக் கடையில் மொத்தம் 1,171 குடும்ப அட்டைகள் பதிவு செய்யப்பட்டுச் செயல்பட்டு வந்தன.

இக்கடையிலிருந்து சுமார் ஒன்னரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேரிமேல்விளைப் பகுதி பொதுமக்கள், அத்தியாவசியப் பொருட்களைப் பெற நீண்ட தூரம் செல்ல வேண்டிய சிரமமான சூழல் நிலவி வந்தது.

பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், தாய் கடையிலிருந்து 250 குடும்ப அட்டைகளைப் பிரித்து, இன்று தேரிமேல்விளை பகுதியிலேயே புதிய பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பகுதிநேரக் கடை திறக்கப்பட்டதன் மூலம், தேரிமேல்விளை பகுதியை சேர்ந்த 250 குடும்ப அட்டைதாரர்கள் இனி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமின்றி, தங்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே அத்தியாவசியப் ரேசன் பொருட்களைக் எளிதாகப் பெற்றுப் பயனடைவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ் ராஜன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.