திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், இன்று (19.09.2026) நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், , நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் (நாங்குநேரி) ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் எம்.ஆர்.எப் டயர்ஸ், பிரிட்டானியா, விக்ரம் சோலார், டிபி சோலார் என பல்வேறு துறைகளை சார்ந்த 188-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ரூ.10,000/- முதல் ரூ.70,000/- வரையிலான மாத சம்பளத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இளைஞர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற நிறுவனங்களைத் தேர்வு செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்று வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முந்தைய அனுபவங்களின்படி, வேலைவாய்ப்பு முகாம்களில் 100 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டால், அதில் 50 பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். சொந்த மாவட்டத்தை விட்டுச் செல்ல தயங்குவது, சம்பளம் போதவில்லை எனக் கூறுவது போன்ற காரணங்களால் பலர் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிவிடுகின்றனர். எந்தவொரு வேலையும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல.
நாம் பெறும் ஒவ்வொரு வேலை அனுபவமும் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கும். என்னுடைய வாழ்க்கைப் பயணத்திலும்கூட, நான் பள்ளிப் பருவத்தில் ரூ.1,000/- சம்பளத்திற்காகச் செய்த முதல் வேலை முதல், ஆதரவற்றோர் இல்லத்தில் சம்பளமின்றி செய்த சேவை வரை பல அனுபவங்களே இன்று என்னை ஒரு ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியாக உயர்த்த உதவின. எனவே, கிடைக்கும் வாய்ப்பை இளைஞர்கள் தவறவிடக் கூடாது. ரூ.10,000/- அல்லது ரூ.15,000 என்பது தொடக்கப் புள்ளிதான். அங்கு கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு அடுத்தடுத்த உயர்பதவிகளுக்கு நீங்கள் முன்னேற முடியும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. கங்கைகொண்டான் சிப்காட் தவிர்த்து, நாங்குநேரி, மருகால்குறிச்சி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களிலும் சிப்காட் அமைப்பதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத்திலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த முகாமில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மரு.கா.சண்முகசுந்தர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ப.பொன்னியின் செல்வன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் உதவி இயக்குநர் .ஜெரிபா ஜி இம்மானுவேல், கல்லூரி நிறுவன தலைவர் கிளிட்டஸ்பாபு, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.வேல்முருகன், அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், வேலைநாடுநர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

