நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மொத்தம் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக நெல்லை போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இதில் கலந்துகொள்ளத் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக வரும் 19-ம் தேதி முதல் 21 வரை 200 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நெல்லை சார்பில் இயக்கப்படுகிறது.

இப் பேருந்துகளைப் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தசரா தொடர் விடுமுறையை முன்னிட்டு நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் இருந்து தூத்துக்குடி, கோவில்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து 16 முதல் 18-ம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருப்பூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 300 சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நெல்லை சார்பாக இயக்கப்படுகின்றன.

இப் பேருந்துகளைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நெல்லை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் செல்வம் தெரிவித்துள்ளார்.