தென்மாவட்டங்களில் பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் புவியை குளிர்விக்கும் விதமாகவும், இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினக் கருப்பொருளான "Inspired by Nature. For Climate. For Our Future." என்பதை மையமாகக் கொண்டு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் மாபெரும் மரம் நடும் விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் பணியக மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்து தலைமை தாங்கிச் சிறப்பித்தார். மேலும், உற்பத்திப் பிரிவு உதவித் தலைவர் ச. சுரேஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
விழாவில் சுமார் 450-க்கும் மேற்பட்ட புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்வாறு நடப்படும் புதிய மரங்களால் நாள் ஒன்றுக்கு சுமார் 11,250 லிட்டர் அளவிலான மழைநீரை ஈர்க்கும் தன்மையும், 8 முதல் 10 டன் அளவிலான கார்பன் உமிழ்வை உறிஞ்சும் திறனும் உண்டு என விழாவில் தலைவர்களால் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பணியாளர்களின் வீடுகளுக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டு இயற்கையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இத்தகைய சிறப்பான விழா சுற்றுச்சூழல் துறை, மக்கள் தொடர்பு, நிர்வாகம், மனிதவளம் மற்றும் சிவில் துறையினரால் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

