சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்: 16127) போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, திருநெல்வேலி ரயில்வே எஸ்பி சிறப்புத் தனிப்படை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மணியாச்சி ரயில் நிலையத்திற்கும் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, தலைமைக் காவலர்கள் பொன்தனசேகரன், தளவாய், மாரித்துரை, கருப்பசாமி மற்றும் காவலர் விக்னேஷ் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தனிப்படையினர் ரயிலின் பின் பகுதியில் அமைந்திருந்த பொதுப் பெட்டியில் பயணிகளின் உடைமைகளைத் சோதனையிட்டனர்.

அப்போது, அப்பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருந்த மெரூன் நிறப் டிராவல் பேக்கை சோதனையிட்டனர். அதில், சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 10.200 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாகக் கஞ்சாவைப் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அதனைத் திருநெல்வேலி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இக்கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்துத் திருநெல்வேலி ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஸ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 10.2 கிலோ கஞ்சா, மேல் நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.