தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு, 43-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்பந்தயம் பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் மதுரை, திருநெல்வேலி, தேனி, கம்பம், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சுமார் 61 ஜோடி மாடுகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்தன.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளைச் திறம்பட ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டியின் சார்பாக ரூ. 7,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான ரொக்கப் பரிசுகளும், எல்.இ.டி டிவிக்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மேல்மாந்தையிலிருந்து வைப்பார் கிராமம் வரை சாலை இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பந்தய ரசிகர்களும் திரண்டு நின்று ஆரவாரத்துடன் மாட்டு வண்டிப் பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.

