வரும் நவம்பர் 14, 2026 அன்று தேசிய குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்தப் பள்ளிகளும் இணைந்து ஒரே நேரத்தில் 1 கோடி விதைப்பந்துகளைத் தயாரித்து வீசும் உலக சாதனை முயற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பசுமை உலக சாதனை முயற்சியைத் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. சிவக்குமார் மற்றும் விதைப்பந்துகள் பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள 936 தொடக்கப்பள்ளிகள், 228 நடுநிலைப் பள்ளிகள், 111 உயர்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,493 பள்ளிகள் இத்திட்டத்தில் நேரடியாகக் களமிறங்குகின்றன. மேலும் 285 தனியார் பள்ளிகள் மற்றும் 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் இதில் பங்கேற்க வைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள சுமார் 1,50,000-க்கும் மேற்பட்ட (1,50,947) மாணவ-மாணவிகள் இச்சேவையில் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு மாணவரும் தலா 100 விதைப்பந்துகளைத் தயாரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆக்ஸிஜன் உற்பத்தி பெருகுவதோடு, பூமி வெப்பமயமாதல் தாக்கத்தில் இருந்தும் தப்பிக்க வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பிரம்மாண்ட முயற்சிக்கு முழு ஆதரவு அளித்த முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, விதைப்பந்து ஆர்வலர் திருமாறன் அவருக்கு விதைப்பந்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துசாமி, வளர்மதி மற்றும் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

