தூத்துக்குடியில் ரூ.200 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விநியோகத்தில் குளறுபடி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக அரசு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.200 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்கி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இத்தொகுப்பு நிவாரணம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ள நிலையில், தூத்துக்குடியில் விநியோகப் பணிகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
பொருட்களைப் பெறுவதற்காக முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மற்றும் வயதானவர்கள் மாலை 3 மணி வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தூத்துக்குடியில் இதுவரை பெயரளவில் சில நூறு பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தினமும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற முறையான அறிவிப்பு இல்லாததால், நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் உள்ளதால், இதுவரை பெறாத தகுதியான குடும்பங்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்பிரச்சினை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் மு. முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுத்துள்ள அறிக்கையில், "ரூ.200 மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் கூடுதல் நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
இதுவரை பொருட்களைப் பெறாத அனைத்துத் தகுதியான குடும்பங்களுக்கும் தொகுப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தினசரி எத்தனை பேருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்பதை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
தினசரி வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நிர்வாகக் குளறுப்படிகளைச் சரிசெய்து, விடுபட்டுள்ள அனைத்துத் தகுதியான குடும்பங்களுக்கும் தடையின்றிப் பொருட்கள் கிடைப்பதற்கான முறையான ஏற்பாடுகளைத் தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

