ஆந்திர மாநிலம், மாசார்பாலம், மயிலாடம் கொண்டல் அக்கிரகாரம் தெருவைச் சேர்ந்தவர் தாதம்பாய் மகன் ஜோகையா (40). இவர் தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை பகுதியில் மேம்பால வேலைக்காக நேற்று இரவு சுமார் 01.00 மணியளவில் ரோடு ரோலர் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்குப் பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இவரது லோடு ரோலர் வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஜோகையா மீது ரோடு ரோலர் ஏறியதில் அவரது இடது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரான திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையைச் சேர்ந்த சிவன் பாண்டி மகன் கண்ணன் (29)என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.