தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருள்மிகு லூர்து அன்னை ஆலயப் பங்கின் திருக்குடும்ப சபையின் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி இன்று (செப்.19) ஆரோக்கியபுரத்தில் அமைந்துள்ள தொழுநோய் மருத்துவமனையில் நடைபெற்றது.

இவ்வாண்டின் வருடாந்திர சந்திப்பையொட்டி, ஆலயத்தில் திருப்பலி வழிபாடுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, திருக்குடும்ப சபையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஆரோக்கியபுரத்தில் உள்ள தொழுநோய் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.

அங்குத் தங்கிச் சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குக் காலை உணவு வழங்கி அன்பைப் பகிர்ந்துகொண்டனர். உணவைப் பெற்றுக்கொண்ட முதியவர்கள் அமைப்பினருக்குத் தங்களது நன்றியையும் ஆசீர்வாத ஜெபங்களையும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர்.

முதியோர்களின் நல்வாழ்விற்காக அமைக்கப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வருடாந்திர நிகழ்வில் லூர்தம்மாள்புரம் பங்கின் திருக்குடும்ப சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.