கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை இனியும் தாமதிக்காமல் உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இவ்விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: "ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி ஆங்கில நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாகப் பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்தச் சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்களாகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், எம்.எல்.ஏ. பாவம் என்று முட்டுக் கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்தச் சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

