உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், சட்டம்-ஒழுங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவம்பர் 23) இரவு 9 மணி முதல் புதன்கிழமை (நவம்பர் 25) காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அறிவித்துள்ளார். இதேபோல், திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் மலையின் சுற்றுப் பகுதிகளைச் சிவப்பு மண்டலமாக அறிவித்து, ஆளில்லா வான்வழி வாகனங்கள் (டிரோன்கள்) பறக்கத் தடை விதித்து மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 144 தடை உத்தரவால் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கே பக்தர்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியிருப்பதாகவும், எனவே இந்தத் தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விசாரணையின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.