மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.
விழாவில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் பேசியதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிப் பிரிவில் 30,762 பேர், கல்லூரிப் பிரிவில் 7,135 பேர், பொதுமக்கள் பிரிவில் 17,320 பேர், அரசு ஊழியர்கள் பிரிவில் 884 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 591 பேர் என 5 பிரிவுகளில் மொத்தம் 56,687 பேர் இப்போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 31,950 பேரும், பெண்கள் 24,737 பேரும் அடங்குவர்.
மாவட்டத்தில் 9 இடங்களில் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மண்டல அளவில் குத்துச்சண்டை, பளு தூக்குதல், வுஷீ ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங் மற்றும் நீர் விளையாட்டுகளான கயாக்கிங், கேனோயிங் ஆகியவை நடப்பாண்டில் புதிய விளையாட்டுகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.75,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சர்வதேச அளவில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் போல் தமிழகம் திகழ 'தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்' திட்டம் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கு.வினு, மாமன்ற உறுப்பினர்கள் கலாராணி, நவீன்குமார், கால்பந்து பயிற்றுனர் பிரவீன் தாஸ், மாதவன், சிவபிரபு, பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

