நினைத்ததை எல்லாம் முதல்வர் பேசுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தவெக தலைமையில் கூட்டணியை உருவாக்குவது, அதற்கான செயல்திட்டம் உருவாக்குவது, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேசவும் தவெக கூட்டணி கூட்டத்திற்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர். நாளை (செப். 9) நடைபெறும் தவெக கூட்டணி தொடர்பான கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும். தமிழக மக்களின் நலன் கருதி, உழைப்பாளர்களின் நலன் கருதி அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விருப்பம். சட்டமன்றம் என்பது சண்டை மன்றமாக இருக்கிறது. சட்டமன்றம் முறையாக நடப்பதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது, இதில் ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்பு இருக்கிறது.

மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றம் வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. சட்டமன்றம் மக்களுடைய வரிப்பணத்தில் நடக்கிறது. அது விரயம் ஆகக்கூடாது. எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்.

விவாதத்தின்போது பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் முறையாக பதிலளிக்கவில்லை. அவர் பேசுவதற்கு நிறைய இடம் இருக்கிறது. பேரவையில் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது முதல்வர் பதில் சொன்னாரா? இதுவரை இதுபோன்று நடக்கவில்லை. நினைத்ததை எல்லாம் முதல்வர் பேசுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

தவெக அரசுக்கு ஆதரவு என்பது அவர்கள் நிலைப்பாட்டைப் பொறுத்தது. தவெக அமைச்சர்கள் முதலில் சென்று மிசா பற்றி படிக்க வேண்டும். இஸ்மாயில் கமிஷன் அறிக்கை என்ற ஒன்று இருக்கிறது. சிறையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள், வன்கொடுமைகள் பற்றி அதில் இருக்கிறது தெரிந்துகொள்ளுங்கள். மிசாவில் கைதானவர்கள் சமூக விரோதிகள் என்று நிர்மல் குமார் பேசியது சிறுபிள்ளைத்தனமானது. மிசா கால கொடுமைகள் தொடர்பாக நிறைய ஆவணங்கள் இருக்கின்றன.

அதை அமைச்சர்கள் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். சர்க்காரியா கமிஷனில் யார் மீதும் வழக்கு போடவில்லை. முதல்வர் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதைவிட்டு 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார். இது திசைதிருப்பும் தந்திரம்" என்று கடுமையாக விமர்சித்தார்.