தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஹெல்ப்லைன் சேவை முறையாக செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு பழுது, பாதாள சாக்கடை அடைப்பு, குப்பை அள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசிய புகார்களை தெரிவிக்க மாநகராட்சி சார்பில் ஹெல்ப்லைன் வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த எண்களில் புகார் பதிவு செய்தால் பதிலாக எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மாறாக புகார் அளித்த வருக்கு, "தங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் தாங்கள் தூத்துக்குடி மாநகராட்சி தொடர்பு கொண்டமைக்கு நன்றி என "குறுஞ்செய்தி மட்டுமே வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநகராட்சி நிர்வாகம் புகார் சேவையை முறையாக கண்காணித்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஹெல்ப்லைனை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி ஆணையர் தலையிட்டு செயல்படாத ஹெல்ப்லைன் எண்களை சரிசெய்து, புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.