முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, அவருடன் பயணிக்கும் சக சினிமா நடிகை அவருக்கு என்ன உறவுமுறை என்று நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அதிமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம், அண்ணா நகர் பகுதியில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆண்ட்ருமணி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பெருமாள் சாமி, சேவியர், ஜெய்கணேஷ், சுடலைமணி, எம். பெருமாள், டேக்.ராஜா, பிரபாகர், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு பகுதிச் செயலாளர் முருகன் வரவேற்புரையாற்ற, மாவட்ட மாணவரணிச் செயலாளர் பில்லா விக்னேஷ் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது: "எம்.ஜி.ஆர் 1977-இல் 130 இடங்களில் வெற்றி பெற்றுப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தார். ஆனால், தவெக தலைவர் விஜய் வெறும் 108 இடங்களில் வெற்றி பெற்று, மற்றவர்களின் தயவோடு ஆட்சி நடத்தி வருகிறார். 65 சதவீத மக்கள் இவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் அமைச்சர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் நடுங்குகின்றனர். தொழிலதிபர் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்றதாகக் கூறிய விஜய், அங்கு கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்துவிட்டுச் சில பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
அரசு நிகழ்ச்சிகள் முதல் வெளிநாடு வரை அவருடன் செல்லும் சக சினிமா நடிகை தங்கையா அல்லது என்ன உறவுமுறை என்பதை நாட்டு மக்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும். அதிமுகவில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டுத் துரோகம் செய்தவர்களே தவெகவில் இணைந்துள்ளனர். நடைபெறவுள்ள 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவே அமோக வெற்றி பெறும்." என்றார்.
வர்த்தக அணி செயலாளரும், தூத்துக்குடி மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த செல்லப்பாண்டியன், பேசுகையில் "தூத்துக்குடியில் வெற்றி பெற்ற அமைச்சர் ஸ்ரீநாத்திற்கும் தொகுதிக்கும் சம்பந்தமே இல்லை. தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று தெரியாமல் மக்கள் தற்போது அவதிப்படுகின்றனர்." என்றார்.
தலைமைக் கழகப் பேச்சாளர் சின்னச்சாமி: "அமைச்சர்களுக்குத் தங்கள் துறை சார்ந்த எந்த புரிதலும் இல்லை. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி குறித்துச் சென்னையில் கேள்வி கேட்டால், தூத்துக்குடி வந்து கேளுங்கள் என அமைச்சர் பதிலளிக்கிறார்."என்றார்.
இளம் பேச்சாளர் செல்வி கவி: "தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்தில் தமிழகத்தில் 187 கொலைகள், 358 பாலியல் குற்றங்கள் மற்றும் 12 ஆவணக் கொலைகள் நடைபெற்றுள்ளன. சட்டமன்றத்தை ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாற்றியுள்ளனர்." என்றார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைமைச் கழகப் பேச்சாளர்கள், மாவட்ட, ஒன்றிய மற்றும் பகுதிச் செயலாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

