நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஓடிய பெருவெள்ளத்தின் பாதையில் அமைந்திருந்த பச்சை நிற வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர், வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற வழியின்றி 2-வது மாடி பால்கனியில் தஞ்சமடைந்தனர். ஒருபுறம் சுற்றியிருந்த வீடுகளும் கட்டிடங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, மறுபுறம் சேறும் பாறைகளும் அதிவேகத்தில் பாய்ந்து வந்தன.
உயிரைக் கையில் பிடித்தபடி பால்கனியில் நின்ற குடும்பத்தினரின் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி, "அந்த வீட்டில் இருப்பவர்கள் உயிரோடு இருக்கிறார்களா?" என்ற பதற்றத்துடன் இணையத்தில் வைரலானது.
தற்போது அந்த வீட்டில் இருந்த குறைந்தது 3 குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாகவும் உயிரோடும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களின் பெயர் மற்றும் முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சுற்றியிருந்த பலமான கட்டிடங்களையே சுருட்டிச் சென்ற வெள்ளத்தில், இந்த வீடு மட்டும் கம்பீரமாகத் தாக்குப்பிடித்து நின்றது உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உறுதியான அடித்தளம் மற்றும் கட்டுமானத் தரமே இதற்குக் காரணம் எனக்கூறி, "இந்த வீட்டைக் கட்டிய பொறியாளருக்கு விருது வழங்க வேண்டும்" எனச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

