திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் இணைக்கோவிலான வெயிலுகந்தம்மன் திருக்கோவிலின் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில், தினமும் அம்மன் பூஞ்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 10-ஆம் திருநாளான நேற்று காலை 6:30 மணியளவில், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் மரத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் "அரோகரா" பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.

நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர், காலை 7:30 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இத்தேரோட்ட நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.