பொதுவாக அரசு விதிகளின்படி, பதவி உயர்வு வரும்போது ஊழியர்கள் வேறு இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்குச் சென்று சில நாட்களிலேயே, நிர்வாகக் காரணங்களைக் காட்டியோ அல்லது தற்காலிகப் பணி மாற்றம் மூலமாகவோ மீண்டும் பழைய இடத்திற்கே வந்து விடுகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில், அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்களுக்குத் தமிழக அரசு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள ஊழியர்கள், ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்களா என்ற முழு விவரங்களையும் சேகரித்து, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசு ஊழியர் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. ஒரே இடத்தில் நீண்ட காலம் இருப்பதால் புதிய மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
மேலும், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் தேவையில்லாத நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு, முறைகேடுகள் மற்றும் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசு தரப்பில் கருதப்படுகிறது. இதனால், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களைக் கண்டறிந்து பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த அதிரடி உத்தரவுக்குப் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

