தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்வதில் சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இது ஒரு வெற்றி மெகா ஊழல் என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: "தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்குக் கொள்முதல் செய்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன; இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன் கடந்த கால ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்டது. அதில் ஊழல் நடந்ததாகக் குறிப்பிட்டு அந்த மின்கொள்முதலை இந்த அரசு ரத்து செய்தது.
இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்யவில்லை. ஆனால், இங்குள்ள தவெக அரசு இதைச் செய்கிறது. 5 நிறுவனங்கள் மூலம் சுமார் 4,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரத் துறை ஏற்கனவே கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, இவ்வளவு அதிக தொகைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு என்ன காரணம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆந்திராவில் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்கொள்முதலில் ஒரு யூனிட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இங்கு ரூ.35 கொடுத்து வாங்குவது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தவெக அரசு நிர்வாகத் திறமையற்ற அரசாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

