கைபர் பக்துன்கவா மாகாணம், கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமையான நேற்று பிற்பகலில் இந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது மசூதியின் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மர்ம நபர்கள் மோதவிட்டு பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்தக் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தால் மசூதியின் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சமீபகாலமாகப் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 199 பயங்கரவாதத் தாக்குதல்களில் 158 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

