தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது மனைவி பிரியா (39). இவர் அப்பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். பிரியாவின் சகோதரி முத்துலட்சுமி என்பவருடன், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாரமடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் (36) என்பவர் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் முத்துலட்சுமியிடம் இருந்து 20 பவுன் நகைகளை வாங்கிய காவலர் முத்துக்குமார், அதனை வங்கியில் அடமானம் வைத்துள்ளார். பின்னர் அந்த நகைகளைத் திரும்பக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு பிரியாவின் கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்ற காவலர் முத்துக்குமாரிடம், நகையைத் திருப்பித் தருமாறு பிரியா கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காவலர் முத்துக்குமாரைக் கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துக்குமாரைத் துறை ரீதியாகப் பணி இடைநீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

