தூத்துக்குடி மட்டக்கடை அயல்நாயகர் தெருவைச் சேர்ந்தவர் பனிமயராஜ். இவரது மகன் பீட்டர், தனக்குச் சொந்தமான விசைப்படகை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம்போல் தனது விசைப்படகை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் பீட்டரின் விசைப்படகில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்தது. அப்போது கடல் காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென படகு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணைக்க முடியவில்லை.

இது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) சிவானந்தராம் கோகுல் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடித்து நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், இந்த தீவிபத்தில் படகில் உள்ள டிரைவர் அறை, படகின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள், பழைய கயிறுகள் மற்றும் பல்வேறு மீன்பிடி உபகரணங்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.