உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷியாவிடம் இருந்து லட்சக்கணக்கான டன் டீசல் இறக்குமதி செய்ய அதிபர் டிரம்ப் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடனான ரஷியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க முயன்ற அமெரிக்காவே, தற்போது ரஷியாவிடம் இருந்து டீசல் இறக்குமதி செய்யத் துணிந்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி, முதற்கட்டமாக 3 லட்சம் டன் டீசல் உடனடியாகவும், நவம்பரில் 5 லட்சம் டன்னும், அதைத் தொடர்ந்து 10 லட்சம் டன்னும் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், உற்பத்தியைப் பொறுத்து கூடுதலாக 30 லட்சம் டன் டீசலை வழங்க ரஷியா சம்மதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கு உக்ரைன் அரசு ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்திலும் டிரம்பின் முடிவுக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்தும் வரை, அந்நாட்டின் எரிசக்தி இறக்குமதிக்குத் தடை விதித்து 2022-ல் இயற்றப்பட்ட அமெரிக்கப் பெடரல் சட்டத்தை டிரம்பின் முடிவு நேரடியாக மீறுவதாக எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டிரம்ப் நிர்வாகம் இந்த டீசல் இறக்குமதித் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயகக் கட்சி மற்றும் ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய செனட் உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு டிரம்ப் அரசுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். உக்ரைன் போருக்கு அமெரிக்கப் பணம் நிதியுதவியாகச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தை டிரம்ப் மீறி, ரஷியாவுக்கு மறைமுக நிதி ஆதாயத்தை ஏற்படுத்துகிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அமெரிக்க மக்களின் கடுமையான எரிசக்தி நெருக்கடியைப் போக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் அதிபரின் சிறப்பு நிர்வாக அதிகாரத்தின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மற்றும் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகியோர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.