தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு PM SVANidhi திட்டத்தின் கீழ் லோக் கல்யாண் மேளா மூலம் கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

முகாமில் சாலையோர வியாபாரிகள் தங்களது வங்கி கணக்கு புத்தகம், செல்போன் எண், இணைப்பு ஆதார் அட்டை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் பரிசீலித்து ஆன்லைன் மூலம் அந்தந்த வங்கி கணக்கு உள்ள வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

இதில் முதன்முறையாக ரூ.15,000 கடன் பெற்று திருப்பி செலுத்தியவர்களுக்கு, இரண்டாவது முறையாக ரூ.25,000, அதன் பிறகு மூன்றாவது முறையாக ரூ.50,000 வங்கி மூலம் கடன் வழங்கப்படும். முதல் முறையாக பெற்ற கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு கிரெடிட் கார்டு வங்கி மூலம் வழங்கப்படும்.

மேலும் சாலையோர வியாபாரிகளின் அடிப்படை மேம்பாடு வசதிகள், இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் பணிகளும் சிறப்பு முகாமில் நடைபெறுகிறது. எனவே மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் முகாமை சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.