தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில், எச்.சி.எல் நிறுவனத்தின் உதவியுடன் வாஷ் இன்ஸ்டியூட் அமைப்பு சார்பில் சர்வதேச கை கழுவும் தினத்தை முன்னிட்டுச் சுகாதார செயல் விளக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.

உலக நாடுகள் முழுவதும் அக்டோபர் 15-ஆம் தேதி சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி முறையாகக் கை கழுவுவதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் சர்வதேச கை கழுவும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி, விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குச் சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி முறையாகக் கை கழுவும் முறை குறித்து வாஷ் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சமுதாய சுகாதாரப் பணியாளர்கள் நேரடிப் பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தங்களது வாழ்வில் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து நோய் தொற்றற்ற தூய்மையான கிராமத்தை உருவாக்கிட உறுதியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாஷ் இன்ஸ்டியூட் நிறுவன ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் எச்.சி.எல் நிறுவனப் பணியாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் செய்திருந்தனர்.