தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வரும் 30.09.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாடப் பயணங்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இடையூறும் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும், பயணிகளின் தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வழக்கம்போல் தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

