தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, செயல்படாத நிலையில் உள்ள மற்றும் பூஜ்ஜிய இருப்புக் கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கான முக்கியப் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி நிர்வாகத்தின் கிளை வங்கிப் பிரிவுத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "செயல்படாத நிலையில் (Inoperative accounts) உள்ள மற்றும் பூஜ்ஜிய இருப்பைக் கொண்டிருக்கும் சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படுவதைத் தவிர்க்க, வரும் 23.12.2026 அன்றோ அல்லது அதற்கு முன்போ உங்கள் அருகிலுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளையில் சமீபத்திய செல்லுபடியாகும் கே.ஒய்.சி. (KYC) ஆவணங்களைச் சமர்ப்பித்து, உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும்போது அல்லது புதுப்பிக்கப்படும்போது, நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் சேவைக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்ட பற்றுரிமை (Lien) தள்ளுபடி செய்யப்படும்.
23.12.2026-க்குள் மீண்டும் செயல்படுத்தப்படாத மற்றும் புதுப்பிக்கப்படாத கணக்குகள் மறு அறிவிப்பின்றி மூடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் www.tmb.bank.in என்ற இணையதளத்தையோ அல்லது 180 0425 0426 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

