இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் காலை இழந்த பிரின்ஸ்டன், நேற்று இரவு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடி BMC பள்ளி அருகிலுள்ள அதிர்ச்சியூட்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த போதைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பிரின்ஸ்டனின் வாகனத்தின் மீது மோதி அவரைக் கீழே தள்ளி, கொலைவெறியுடன் சரமாரியாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் அவரது மண்டை உடைந்து, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் நேற்று இரவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மனிதநேயத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குள்ளாக்கும் அநாகரிகச் செயல்!

ஏற்கெனவே காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் தனது காலை இழந்து வாழ்நாள் பாதிப்பைச் சுமந்து வரும் ஒரு மனிதர், தனது குடும்பத்தினருடன் வீடு திரும்பும் நேரத்தில் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்துகிறது.

ஒரு பெண்ணும் குழந்தைகளும் உடனிருக்கும்போது இத்தகைய கொடூரத் தாக்குதலை நடத்துவதற்கு எத்தகைய துணிச்சல்? பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறை இத்தகைய சமூக விரோதச் செயல்களை எவ்வாறு அனுமதிக்கிறது?

பிரின்ஸ்டன் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கண்டறிய வேண்டும். இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்களையும், திட்டமிடப்பட்ட சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பிரின்ஸ்டனுக்கு உரிய உயர்தர மருத்துவச் சிகிச்சையும், தேவையான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.