தமிழகத்தில் நாளை (நவம்பர் 10) தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி ஒன்று நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் நாளை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மிதமான மழை பெய்யும் பகுதிகள்: மேலும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

